ஏன் கொலை செய்தோம்? "மர்டர்" மணிகண்டன் வாக்குமூலம்

0 5583

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொலை செய்தது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடிய கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தஞ்சை மாவட்டம் கல்லணையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உறவுக்கார சிறுவர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு மணிகண்டன் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறும் போலீசார், கொலை சம்பவம் குறித்து அவன் அளித்த வாக்குமூலத்தையும் வெளியிட்டுள்ளனர்.

கல்லணையிலிருந்து மூன்று ஆடுகளை திருடிக்கொண்டு 3 பேரும் நவல்பட்டு வழியே புதுக்கோட்டை சென்று அவற்றை விற்க முயன்றதாகவும் நள்ளிரவில் பூலாங்குடி Sbi ATMஅருகே சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனும் தலைமை காவலர் சித்திரவேலும் தங்களை வழிமறித்தனர் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளான்.

வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பி ஓடிய தங்களை விடாமல் விரட்டி வந்து மடக்கிப் பிடித்த பூமிநாதன், தங்களது கையிலிருந்த அரிவாளை பறித்து வைத்துக் கொண்டார் என்றும் பின்னர் தனது தாய்க்கும் சக காவலர்களுக்கும் போன் செய்து அங்கு வருமாறு கூறினார் என்றும் கூறியுள்ளான் மணிகண்டன்.

தாய்க்குத் தெரிந்தால் அவமானம், போலீஸ் வந்தால் கைது செய்துவிடும் என்ற அச்சம் மேல் எழ, எப்படியாவது எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணி இருக்கிறான் மணிகண்டன்.

இதனையடுத்து பூமிநாதன் போனில் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கல்லால் தாக்குமாறு இரு சிறுவர்களிடமும் சைகையால் கூறியிருக்கிறான் மணிகண்டன். அதன்படி அவர்கள் கல்லால் தாக்கிய போது பூமிநாதன் நிலைகுலைந்து நின்றுள்ளார்.

அப்போது பூமிநாதனின் கையிலிருந்த அரிவாளை பிடுங்கி, தலையில் மூன்று இடங்களில் வெட்டி இருக்கிறான் மணிகண்டன். தொடர்ந்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவற்றை பறித்து அங்கிருந்த மழைநீர் குட்டையில் வீசிச் சென்று விட்டதாகவும் கூறிய மணிகண்டன், அதனால் தாங்கள் போலீஸ் வசம் சிக்க மாட்டோம் என எண்ணியதாகவும் கூறியுள்ளான்.

ஆனாலும் பூமிநாதன் எனது தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசியதால் அந்த எண் மூலம் தாயின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் கல்லணை வீட்டிற்கு வந்து தங்களை கைது செய்ததாக மணிகண்டன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments