காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.. நவ.25, 26, 27ல் மிக கனமழை பெய்யக்கூடும்..!

0 8363
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.. நவ.25, 26, 27ல் மிக கனமழை பெய்யக்கூடும்..!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், இது மேலும், மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அம்மையம், ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

நாளை திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்கள் கன மழைக்கும் வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகள் மற்றும் தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments