வில்லேஜ் சமையல் "டாடி" ஆறுமுகத்தின் குடிகார "சன்"க்கு வலை..!

0 8108
வில்லேஜ் சமையல் "டாடி" ஆறுமுகத்தின் குடிகார "சன்"க்கு வலை..!

யூடியூப்பில் சமையல் மூலம் பிரபலமான டாடி ஆறுமுகத்தின் மகன் ,  மதுக்கூடத்துக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கி, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடியதாக  புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து  தேடி வருகின்றனர். தந்தையின் சமையல் திறமையை வீடியோவாக பதிவிட்டு யூடியூப்பில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் குடிக்கு அடிமையானதால்   நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்ட 60 வயதான ஆறுமுகம் என்பவரது “வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி” என்ற யூடியூப் சேனல், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட பிரபலமான சமையல் சேனல். கிராமத்துப் பின்னணியில் விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ஆறுமுகம்.

தந்தை ஆறுமுகத்துக்குள் இருக்கும் சமையல் கலைஞனை உலகுக்கு அறிமுகப்படுத்தி, இன்று மாதம் பல லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் அவரது மகன் கோபிநாத். “டாடி ஆறுமுகம்” என்ற பெயரில் புதுச்சேரியில் 3 இடங்களில் உணவகம் நடத்தி வருகிறார் கோபிநாத்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி முத்தியால்பேட்டையிலுள்ள AK டார்வின் என்ற "பப்" எனப்படும் மதுக்கூடத்துடன் கூடிய ஹோட்டலுக்குச் சென்றுள்ளார் கோபிநாத். முதல் இரண்டு சுற்று மது உள்ளே போனதும் பப் ஊழியர்களை தகாத சொற்களில் வசைபாடுவதும், தேவையில்லாமல் அழைத்து மிரட்டுவதுமாக கோபிநாத் அலப்பறை செய்ததாகக் கூறுகின்றனர் ஹோட்டல் தரப்பினர்.

இரவு 8 மணிக்கு கோபிநாத் அன் கோ பப்புக்குள் நுழைந்த நிலையில், 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டனர் என்று கூறப்படுகிறது. அதற்கு அங்கு பணியில் இவர்ந்து ஜார்ஜஸ் சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

போதையின் உச்சத்தில் இருந்த கோபிநாத், “நான் யார் தெரியுமா ? டாடி ஆறுமுகத்தின் மகன். எனக்கே சரக்கு இல்லை என்கிறாயா ?” என்று கேட்டவாறு ஜார்ஜஸ் சினாஸை ஆபாச சொற்களால் அர்ச்சனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காலி பீர் பாட்டிலை உடைத்து, ஜார்ஜஸ் சினாஸ் தலையில் அடிக்கப் பாய்ந்ததாகவும் தடுக்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் 3 பேரும் சேர்ந்து ஜார்ஜஸ் சினாசை தாக்கியதோடு, பப்பில் இருந்த சேர், கண்ணாடி டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து போலீசார் வந்தபோது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிநாத்.

வம்பு செய்த கோபிநாத் அன் கோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், பப் ஊழியர் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். அதன்படி ஜார்ஜஸ் சினாஸ் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள கோபிநாத், அவரது நண்பர்கள் ஜெயராம் மற்றும் தாமு ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments