வாகனத் தணிக்கையின்போது விபரீதம்.. பறிபோன ஆர்.டி.ஓவின் உயிர்..!

0 5717
வாகனத் தணிக்கையின்போது விபரீதம்.. பறிபோன ஆர்.டி.ஓவின் உயிர்..!

கரூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் அதிவேகமாக வந்த மஹிந்திரா மேக்சி கேப் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்கப் பிரிவில் மோட்டார் வாகன தணிக்கை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ். அலுவலக வாகனத்தில் அவ்வப்போது தனியாகச் சென்று வாகனத் தணிக்கையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஹிந்திரா மேக்சி கேப் வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.

வேனை நிறுத்தி தணிக்கை செய்வதற்காக எதிரே நின்று சைகை காண்பித்துள்ளார் கனகராஜ். ஆனால் தனது வேகத்தில் கொஞ்சம் கூட குறையாத அந்த வேன், கனகராஜ் மீது பயங்கரமாத மோதி தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது. அந்த இடம் அடிக்கடி விபத்து நிகழும் இடம் என்று கூறப்படும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு எப்போதும் நின்றிருக்கும் என்று கூறப்படுகிறது. வேன் மோதி தூக்கிவீசப்பட்ட கனகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகில் இருந்த ராஜ் ஆர்த்தோ என்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பட்ட காயத்தோடு, குற்றுயிரும் குலை உயிருமாக அங்கு அழைத்துச் செல்லப்பட்ட கனகராஜ், சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் மட்டும் கிடைத்து பதற்றத்தோடு வந்த அவரது மனைவி, அசைவின்றி கிடந்த கணவரின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்திக் கதறி அழுதது, சுற்றி இருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் கனகராஜ் மீது மோதிய வேன், டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்களை அழைத்து வரும் வேன் என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலையா என விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கனராஜின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments