5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: நவ.25, 26ல் மிக கனமழை பெய்யக்கூடும்!

0 27079

இன்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை மையம், ஏனைய மாவட்டங்கள். மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாளை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள அம்மையம், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையுக்கும், வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

இதனை அடுத்து, வரும் 24ஆம் தேதி ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்த வானிலை மையம், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments