சமூக சேவகியின் முகத்தை அடித்து நசுக்கிய பாடி பில்டர்... லாக்டவுன் காதல் டார்ச்சர்!

0 5758

சென்னையில் ஊரடங்கு காலத்தில் சமூக சேவகியான காதலியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கடுமையாக தாக்கி சித்ரவதை செய்த புகாருக்குள்ளான ஆணழகன் பட்டம் வென்ற பாடிபில்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் காட்டுப்பாக்கத்தில் டோன்னஸ் பிட்னஸ் சென்டர் என்ற பெயரில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் மணிகண்டன் தான் புகாருக்குள்ளான அடாவடி பாடிபில்டர்.கட்டி கட்டியாக பழனி படிக்கட்டு போல உடலை பிட் ஆக வைத்திருக்கும் மணிகண்டன் இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றவர்.

ஆதரவற்றோருக்கு தனது ஊதியத்தில் இருந்து ஏராளமான உதவிகள் செய்து வந்த மென்பொறியாளரும் சமூக சேவகியான சந்தியா என்பவர், தன்னிடம் உடற்பயிற்சிக்கான ஆலோசனை பெற வந்த போது காதல் வலையில் வீழ்த்திய மணிகண்டன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தானும் சமூக சேவையில் அக்கறை கொண்டவன் என்று காட்டிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த மணிகண்டணை நம்பி சந்தியா, கணவன் மனைவி போல நெருங்கி பழகியதோடு பலவகைகளில் பணம் கொடுத்தும் உதவியுள்ளார்.இந்த நிலையில் சந்தியாவை போலவே வேறு சில பெண்களையும் மணிகண்டன் காதல் வலையில் வீழ்த்தியதோடு வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளான்.

இதனால் , கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் மணிகண்டனுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த சந்தியாவுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெண் என்றும் பாராமல் உடல் பராக்கிரமத்தை காட்டும் விதமாக அந்தப்பெண்ணை மணிகண்டன் கடுமையாக தாக்கியதோடு, தன் மீது போலீசில் புகார் அளித்தால் ஆசிட் கூலிப்படையை ஏவி கொலை செய்து சடலத்தை ஆசிட்டில் கரைத்துவிடுவேன் என்று சந்தியாவை கடுமையாக மிரட்டி உள்ளான். இதனால் அவனுக்கு பயந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து வசித்து வந்துள்ளார் சந்தியா.

அண்மையில் மணிகண்டன் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சர்வீஸ் ஊழியரை குத்துச்சண்டை வீரரை போல தாக்கிய வீடியோ மீடியாக்களில் செய்தியாக வெளியானதை கண்டு தைரியமானார்.ஊரடங்கு காலக்கட்டத்தில் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட தனக்கு, காதலன் மணிகண்டனால் நேர்ந்த வன்கொடுமையை, புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையரிடம் புகாராக அளித்தார் .

இதையடுத்து காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த புகார் குறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். பெண்ணிடம் வீரம் காட்டிய அடாவடி ஆணழகன் மணிகண்டன் மீது மானபங்கம் படுத்துதல், நம்பிக்கை மோசடி செய்தல் , கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாடி பில்டர் மணிகண்டன் தலைமறைவான நிலையில், போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஏற்கனவே குடியிருப்பு ஊழியரை தாக்கிவிட்டு, அவருக்கு கிரில் சிக்கன் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்திய பாடி பில்டர், தான் காதலித்த பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments