முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விஷாகப்பட்டினம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு...

0 1925

முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விஷாகப்பட்டினம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், புதிய போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனை அடுத்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன 'ஐ.என்.எஸ். விஷாகப்பட்டினம்' போர்க்கப்பலை ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நாட்டின் கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், வான் மற்றும் கடற்பரப்பில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையிலும் நவீன ஆயுதங்களுடன் 'ஐ.என்.எஸ். விஷாகப்பட்டினம்' போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் என 130 கப்பல்கள் உள்ளதாகவும், வரும் 2027ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை 170ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் கடற்படை துணை தளபதி எஸ்.என்.கோர்மேட் தெரிவித்திருந்தார். இந்த வரிசையில் 'ஐ.என்.எஸ். விஷாகப்பட்டினம்' போர்க்கப்பலும் இணைந்தது.

பாதுகாப்புத் துறையின் 15பி திட்டத்தின் கீழ் நான்கு அதிநவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், மும்பை உள்ள மசேகோன் நிறுவனம் கட்டுமான செய்த நிலையில், அக்கப்பலுக்கான அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்நிலையில் அந்த போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சுமார் 7 ஆயிரத்து 400 டன் எடை கொண்ட இந்த கப்பலில் பிரம்மோஸ், பாரக் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள், துப்பாக்கிகள், நீர் மூழ்கி ஏவுகணைகள், அதிநவீன ரேடார்கள், மேம்படுத்தப்பட்ட தொலைதொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 164 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 2 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வசதியும் உள்ளது. மேலும் இக்கப்பலில் 312 பேர் வரை பணியாற்றலாம் என்றும் 30 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படைக்கு இந்த புதிய போர்க்கப்பல் கூடுதல் வலிமையை தரும்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சில பொறுப்பற்ற நாடுகள் தங்களது குறுகிய நலனிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட விதிகளை மீறுவதாக சீனாவை மறைமுகமாக விமர்சித்தார்.

சுதந்திரமான கடல்சார் கப்பல் போக்குவரத்து, தடையற்ற வணிகம் உள்ளிட்டவற்றில் இந்தியா நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும், இந்தோ - பசிபிக் கடற்வழிப்பாதையில் இந்திய கடற்படையின் பங்கு மிக முக்கியமானது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ், முழுவதும் உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், கப்பல் கட்டும் மையமாக இந்தியா உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments