கொசஸ்தலை ஆற்றங்கரையில் வெள்ள பாதிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!

0 2377
கொசஸ்தலை ஆற்றங்கரையில் வெள்ள பாதிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், சென்னை அடுத்த மணலி நாபாளையம் அருகே ஆர்ப்பரித்துச் சென்றது.

 கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், மணலி அருகேயுள்ள விச்சூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆற்று நீரில் இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.

 கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், திருவலங்காடு அடுத்த எல்.வி.புரம் தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மணவூர் பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துச் சென்றனர்.

 வெள்ளப்பெருக்கின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் கிராமத்தில் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு 30 நாட்களே உள்ள நிலையில் பொன்னி, சீரக சம்பா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை.

 கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி சடையங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனை அடுத்து, தண்ணீர் தேங்கிய இருளர் காலனி குடியிருப்பு பகுதி மக்கள், படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

 வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள நாராயணபுரம் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பட்டறை பெருமந்தூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே செல்லும் சிதிலமடைந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

 இதனை அடுத்து, சென்னை அடுத்த மணலி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகளை கேட்டறிந்தார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மணலி புதுநகர் பகுதியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தங்கியிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments