"ஆன்லைன்" விளையாட்டு மோகம் நகை, பணத்தோடு கிளம்பிய 15 வயது சிறுவன்

0 3937

சென்னையில் ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காத கோபத்தில், வீட்டிலிருந்த 213 சவரன் நகைகள், 33 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு நேபாளத்துக்குச் செல்லவிருந்த 15 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவரின் 15 வயது மகன் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி விடுமுறை காலங்களில் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயர் கேம் என்ற விளையாட்டுக்கு அடிமையான சிறுவனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த சிறுவன், கடந்த 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் திடீரென மாயமாகி இருக்கிறான்.

வீட்டிலிருந்த பீரோ திறந்து கிடந்த நிலையில், அதிலிருந்த 213 சவரன் நகை, 33 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவையும் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

3 தனிப்படைகள் அமைத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுவனின் செல்போன் எண்ணை டிராக் செய்து, அவன் தாம்பரத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

தாம்பரம் பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்க சிறுவன் காத்திருந்தத போது அவன் மீது சந்தேகம் கொண்ட ஊழியர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுவனைப் பிடித்து விசாரித்ததில் 44 ஆயிரம் பணம் செலுத்தி, நேபாளம் செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நகைகளையும் பணத்தையும் போலீசார் மீட்டனர்.

பெற்றோர் ஆன்லைன் விளையாட்டுக்குத் தொடர்ந்து தடை போட்டுக்கொண்டே இருந்ததால் ஏற்பட்ட கோபத்தில் வீட்டைவிட்டுச் செல்ல முடிவெடுத்ததாக சிறுவன் கூறியுள்ளான். அவனுக்கு மனநல ஆலோசனை கொடுத்து எச்சரித்து, பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments