வெள்ளக்காடாக மாறியுள்ள திருப்பதி !

0 36382

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

ஆந்திராவில் கடந்த 2 நாளாக கனமழை பெய்து வருகிறது. திருப்பதி திருச்சானூரில் சுவர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையில் கட்டப்பட்டிருந்த வீடு மண்சரிவு காரணமாக சரிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அனைவரும் முன்னதாகவே வெளியேறியதால் உயிர் தப்பினர்.

திருப்பதி லீலா மகாலில் இருந்து மங்களம் செல்லும் சாலையில் வெள்ளம் ஆறு போல் பாய்ந்தது. வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்

திருமலையில் உள்ள ஜாபாலி ஹனுமன் கோயில் மழை வெள்ள நீர் புகுந்ததால் அர்ச்சகர்கள் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

அதிக மழை காரணமாக திருமலை திருப்பதி இடையே ஆன மலைபாதைகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மலைப்பாதையில் விழுந்து கிடக்கும் மரங்கள், பாறைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஏற்படுத்த தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதி-திருமலை இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கு நேற்றும் இன்றும் ஏற்கனவே தடை அமலில் இருந்த நிலையில் நாளை சனிக்கிழமையும் பாத யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேஷாச்சலம் மலைப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் காட்டருவி போல் திருப்பதி - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் கொட்டியதால் வாகனங்கள் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

திருப்பதியை பொருத்தவரை இது போன்ற அதிகன மழை இதற்கு முன்பு எப்போதும் பெய்ததில்லை என்றும் நகரை சுற்றி இருந்த ஏரிகள்,குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சித்திராபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே வாகனங்களில் சிக்கிய நபர்களை ஜேசிபி எந்திரம் மூலம் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது திடீரென வெள்ளம் அதிகரித்தால் 11 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை அருகே அணை உடைந்து சாலையில் உள்ள பாலத்தின் மீது வெள்ளம் பாய்ந்ததால் இரண்டு பேருந்துகள் சிக்கிக்கொண்டன. அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.

அணையில் இருந்து வெளியான தண்ணீர் 20 கிராமங்களை சூழ்ந்துள்ளது. அந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள மலை மீது தஞ்மடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments