மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் ; பிரதமர் நரேந்திரமோடி

0 2328
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் ; பிரதமர் நரேந்திரமோடி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தாம் பிரதமராக பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக கூறினார். விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார்.

சிறு விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்களும் இயற்றப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகள் தங்களது விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவற்காகவும் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

எனினும் விவசாயிகளில் ஒரு பிரிவினர் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், எவ்வளவோ முயன்றும் வேளாண் சட்டங்களின் பயன்களை அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை என்று தெரிவித்தார். வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது தங்களுடைய தவறு என கருதுவதாகவும், இந்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.

எனவே வேளாண் சட்டங்களை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும், நடப்பு மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, விடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பயிர் முறையை மாற்றவும் மற்றும் குறைந்த பட்ச ஆதார விலையை மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படையாகவும் மாற்றவும் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

அந்த குழுவில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். தேசத்தின் கனவுகள் நனவாவதற்கு தொடர்ந்து இன்னும் கடினமாக உழைப்பேன் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments