ஜெய்பீம் பட பாணியில் போலீசார் சித்ரவதையா.? திருட்டு வழக்கு திகில்..! ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

0 2479

கள்ளக்குறிச்சியில் திருட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரில், 3 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது வீட்டிற்கு கடந்த 14-ந்தேதி இரவு 11 மணிக்கு வந்த சின்னசேலம் குற்றப்பிரிவு போலீசார், பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் என மூன்று பேரைத் திருட்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், சக்திவேல் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மூன்று நாட்களாக விசாரணை என்ற பெயரில் அவர்கள் 5 பேரையும் அடித்துத் துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் நவம்பர் 16-ம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

செய்யாத திருட்டுக் குற்றங்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில், சமூக வலைதளங்களிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் குரல்கொடுக்க தொடங்கின.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் நவம்பர் 17-ந் தேதி பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் திருட்டு வழக்கில் கைது செய்ததாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற இருவரையும் விடுவித்தனர்.

திருட்டு தொடர்பாக கைதான மூவரின் கைரேகைகளும் சின்னசேலம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் சேகரிக்கப்பட்ட கைரேகைகளும் ஒத்துப் போவதாகக் குறிப்பிட்ட போலீசார், சம்பந்தப்பட்ட மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் கூறி, அவர்கள் நகைகளை விற்ற இரு நகைக்கடைகளில் இருந்து இருபத்தி ஆறு சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரகாஷ் உள்ளிட்ட மூவரும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் சக்திவேல் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments