கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் திருப்பதி

0 5634

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால்,  தெற்கு ஆந்திராவின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கித் தத்தளித்தன..

திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளான மதுரா நகர், கொல்லவானி குண்டா, லஷ்மிபுரம், சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர்.

திருப்பதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் திருமலை, கடப்பா, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து, திருப்பதியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.

சாலையின் இருமருங்கிலும் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியதால், மீட்புப் படையினரும் அக்கம்பக்கத்தினரும் கயிறுகட்டி பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வந்தனர்.

திருப்பதி சிவஜோதி நகரில் கனமழைக்கு ஒதுங்க வழியாமல் கம்பங்கள் அருகில் விழிபிதுங்கி நின்ற எருமை மாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மண்சரிவு காரணமாக திருமலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்ட நிலையில் திருப்பதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கபிலேஸ்வர கோவில் மலை அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. திருமலை ஜாபாலி அனுமான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வெள்ள நீர் புகுந்தது.

வெள்ளநீரில் வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஆங்காங்கே செல்ஃபி எடுத்தவண்ணம் இருந்தனர். சில இடங்களில் தேங்கிய மழைநீரில் சிறுவர்கள் நீச்சலடித்தும், வாலிபால் விளையாடியும் உற்சாகமாக காணப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments