மனைவியிடம் அத்துமீறிய நண்பன்... கொலை செய்து ஆற்றில் வீசிய நபர்

0 4365

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செல்போனில் மனைவியிடம் தவறாக  பேசிய நண்பரை  தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலைசெய்து காவிரி ஆற்றில் சடலத்தை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். 

குமாரபாளையம் தம்மண்ண செட்டியார் வீதியை சேர்ந்த தினேஷ்வரன் என்பவர் கடந்த 14ஆம் தேதி நண்பர் வெங்கடேஷ் என்பவரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை. இரண்டு நாட்களாக பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் தினேஷ்வரன் கிடைக்காததால், பெற்றோர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 தினேஷ்வரனுடன் கடைசியாக இருந்த வெங்கடேஷ் மீது சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது வீட்டில் தகராறு செய்துள்ளனர். இதனால் வெங்கடேஷ் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரின் விசாரணையின்போது, வெங்கடேஷ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது மனைவி நிர்மலாவிடம் தினேஷ்வரன் தொடர்ந்து செல்போனில் தவறாக பேசியதால் வீட்டிலிருந்த குடிநீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை மூட்டை கட்டி நள்ளிரவில் தனது தம்பி கிருஷ்ணராஜ் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காவிரியாற்றில் வீசியதாகவும் வெங்கடேஷ் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வெங்கடேஷையும் அவனது தம்பியையும் கைது செய்த போலீசார், தினேஷ்வரனின் சடத்தைத் ஆற்றில் தேடி வருகின்றனர். 

தினேஷின் தவறான நடவடிக்கைகள் குறித்து முறையாகப் புகாரளித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கூறும் போலீசார், வெங்கடேஷின் கண்மூடித்தனமான ஆத்திரம் அவரது வாழ்க்கையோடு சேர்த்து, அவரது தம்பியின் வாழ்வையும் வீணாக்கிவிட்டதாகக் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments