திருட்டு காருடன் தப்பியவர்களை காரில் விரட்டி பிடித்த போலீஸ்..! சினிமாவை மிஞ்சும் காட்சிகள்..!

0 6139
திருட்டு காருடன் தப்பியவர்களை காரில் விரட்டி பிடித்த போலீஸ்..! சினிமாவை மிஞ்சும் காட்சிகள்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கார் மற்றும் நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற கொள்ளையர்களை பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீசார் மடக்கிபிடித்த  பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மாமரத்து பட்டிதென் குமாரபாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ் . இவரை மிரட்டிய 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல், அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் , அவருக்கு சொந்தமான மாருதி கார் ஒன்றையும் பறித்துக் கொண்டு தப்பிச்செல்வதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு வயர்லெஸில் தகவல் தெரிவிக்கப்பட்டது .

கோவை மாவட்ட பகுதியான பொள்ளாச்சி நோக்கி கார் செல்வதாக கூறப்பட்டது. இதையடுத்து சம்ப்பந்தப்பட்ட காரை விரட்டிப்பிடிக்க போலீசாருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின் படி ஹைவே ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மாருதி கார் ஒன்று நிற்காமல் அதி வேகமாக சென்றது.

களவாடப்பட்ட மாருதி கார்தான் அது என்பது தெரியவந்ததால் போலீசார் சினிமா பாணியில்காரை துரத்திச்சென்றனர்.போலீசாரின் வாகனம் எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக சைரன் ஒலிக்கவிட்ட நிலையிலும் சளைக்காமல் காருடன் தப்பிச்சென்றனர் கொள்ளையர்கள்.சில கிலோ மீட்டர்கள் சாலையில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய கொள்ளையர்கள் சென்ற காரை, விடாமல் துரத்திச்சென்ற போலீசார் சின்ன பாளையம் பகுதியில் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் தங்கராஜிடம் கார் மற்றும் 3 பவுன் பறித்துச்சென்ற கொள்ளையர்கள் ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கார் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார் தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சினிமா பாணியிலான சம்பவமாக இருந்தாலும் நிஜமாகவே உயிரை பணயம் வைத்து வேகமாக துரத்திச்சென்று கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments