எலி கடிச்ச வயருக்கு ரூ 1 லட்சம் பில்லு…? என்ன ‘கியா’ இதெல்லாம்..! இன்ஸ்சூரன்ஸ் மோசடிக்கு திட்டம்.?

0 5030

காரின் என்ஜினில் உள்ள வயரை எலி கடித்து விட்டதாக கூறி பழுது பார்ப்பதற்கு சென்ற கியா செல்டாஸ் காருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனக்கூறி அதிரவைத்ததாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள கியா கார் சர்வீஸ் மையத்திற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சரானால் காரின் டயரையே புதிதாக மாற்றிக்கொடுக்கும் கியாவின் சர்வீஸ் கட்டணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் காசிராஜன். இவரது கியா செல்டாஸ் காருக்குள் புகுந்த எலி ஒன்று, என்ஜின் வயரைக் கடித்து வைத்திருந்தது. அதனை முறையாக சரிசெய்ய வேண்டும் என்பதற்காக தனது காரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஎஸ்டி கியா சர்வீஸ் மையத்திற்கு அனுப்பி வைத்தார்.

என்ஜினை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, காசிராஜனைத் தொடர்பு கொண்ட கியா சர்வீஸ் மைய மேலாளர், கார் என்ஜினில் முக்கிய வயர் கட்டாகி இருப்பதால் அதனை சரிசெய்ய குறைந்த பட்சம் ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அதனை இன்சூரன்ஸில் கிளய்ம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி அதிரவைத்துள்ளார்.

அவரது காருக்கு செய்திருந்த இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடம், தங்கள் சர்வீஸ் மையத்துக்கு தொடர்பு இல்லை என்பதால் காரை சர்வீஸ் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அம்பத்தூரில் உள்ள கியா கார் சர்வீஸ் மையத்துக்கு கொண்டு சென்றபோது அவர்கள், எலி கடித்த வயரை முழுமையாக சரி செய்து விட்டு 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். இதனைக் கண்ட வழக்கறிஞர் காசிராஜன், சாலிகிராமத்தில் உள்ள கியா சர்வீஸ் மையம் தன்னை ஏமாற்ற முயற்சித்திருப்பது குறித்து அதிர்ந்து போனார்.

இதையடுத்து சாலிகிராமம் சர்வீஸ் மையத்திற்கு போன் செய்து, தனது காரில் பிய்ந்துபோன வயரை மாற்ற ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனக் கூறி ஏமாற்ற முயன்றது ஏன் ? என்று விசாரித்த போது, அவர்கள் சொன்ன பதில் இன்னும் விவகாரமாக இருந்தது. வயர் பிய்ந்துபோனால்கூட மொத்த பாகத்தையும் புதிதாக மாற்றுவதற்காக அந்த தொகையை குறிப்பிட்டதாக கூறினார்

கியா நிறுவன கார் பஞ்சரானால் போதும் டயரையே புதிதாக மாற்றிக் கொடுக்கும் வகையில் கியாவின் காப்பீட்டு இருக்கும் என்று கூறி சிலிர்ர்க்க வைத்தார்

இதையடுத்து சாலிகிராமம் விஎஸ்டி கியா சர்வீஸ் மையத்தில், கார் வைத்திருக்கும் வாடிக்கையாளரிடம் மோசடியாக பணம் பறிக்க முயற்சி நடப்பதாக வீடியோ வெளியிட்ட காசிராஜன், வி.எஸ்.டி கியா சர்வீஸ் மையத்திற்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்

இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள சாலிகிராமம் விஎஸ்டி கியா சர்வீஸ் மேலாளர், முழுமையான பாகத்தை மாற்றுவதற்கு 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்று கூறியதாகவும், சம்பந்தபட்ட வாடிக்கையாளர் போலீசில் கொடுத்துள்ள புகாருக்கு தங்கள் சட்டக்குக்குழுவினர் பதில் அளித்துள்ளனர் என்றும் கூறிய அவர், முழுமையாக காரின் உதிரி பாகங்களை மாற்ற நிதி தரும் காப்பீட்டு நிறுவனங்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.

கியா கார் சர்வீஸ் மையம் மட்டுமல்ல, பெரும்பாலான அங்கீகாரம் பெற்ற கார் நிறுவனங்களின் சர்வீஸ் மையங்கள், சாதாரண பழுது நீக்குவதற்கு கூட கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது இன்சூரன்ஸ் மூலமாகவோ அதிக அளவில் பணம் கறக்கும் நோக்கில் மொத்தமாக புதிய உதிரி பாகங்களை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று கூறுவதால் அங்கீகாரமில்லா சர்வீஸ் மையங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments