பேய் பீதியில் தூக்கில் தொங்கிய போலீஸ்காரர்..!

0 5467

கடலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் கனவில் வந்து பயமுறுத்திய பேய்க்கு பயந்து காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீக்குளித்த பெண்ணுக்கு பயந்து 15 நாட்கள் பூஜை அறையில் முடங்கி கிடந்த காவலர் தூக்கில் தொங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வது போல ஒரு திகில் சம்பவம் கடலூரில் அரங்கேறி இருக்கின்றது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் கடலூர் ஆயுதப்படை போலீசில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், ஒரு ஆண், மற்றும் பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி விஷ்ணுபிரியாவையும் 2 குழந்தைகளையும் அனுப்பி வைத்த பிரபாகரன், வீட்டில் தான் மட்டும் தனியாக இருந்தார். விஷ்ணுபிரியா திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார், பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பிரபாகரனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்க்கிடையே தனது கனவில் தியீல் எரிந்த பெண் ஒருவர் கரு கருவென கோராமான முகத்துடன் வந்து தன்னை போட்டு அமுக்குவதாகவும் , கழுத்தை நெரிப்பதாகவும் பிரபாகரன் கூறி வந்துள்ளார். இதனால், தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்த அவர் அதற்காக குறி சொல்பவர்களை பார்த்து மந்திரித்துள்ளார். முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று தாயத்து கயிற்றையும் கையில் அணிந்துள்ளார். பேய்பீதியால் பணிக்கு செல்ல பயந்த பிரபாகரன் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையிலேயே பதுங்கி இருந்துள்ளார்.

ஓரளவு பயம் நீங்கியதால் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய பிரபாகரனுக்கு மீண்டும் கனவில் அந்தப்பெண் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணுக்கு பயந்து பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் மரணத்துக்கு பணிச்சுமையோ, அதிகாரிகளின் அழுத்தமோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனக்கூறும் சக போலீசார், முப்பொழுதும் இருட்டை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்ததோடு, பேய் குறித்த பயம் மட்டுமே காரணம் என்று தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் பேயாக வந்து தனக்கு மரண பயத்தைக் காட்டி விட்டதாக போலீசாரிடம் கூறி வந்த நிலையில் பிரபாகரன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அவரது குடும்பத்தை மட்டுமல்லாமல் கடலூர் காவலர் குடியிருப்பில் உள்ள மற்ற போலீசாரின் குடும்பத்தினரையும் கலங்க வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments