கையெல்லாம் கிழிச்சிருக்கோம் ரூ 10 லட்சம் கொடுத்துருங்க, வலையில் சிக்கிய கிட்னாப்பர்ஸ்..!

0 3987

ஆம்பூரில் வெங்காய மண்டி அதிபரை கடத்த முயன்று திட்டம்  தோல்வி அடைந்ததால், தன்னை தானே கடத்தி கையை கிழித்துக் கொண்ட வெங்காய மண்டி அதிபரின் மருமகன், பணம் பெற முயன்ற போது தனது கூட்டாளிகளுடன் போலீசில் சிக்கியுள்ளார். 10 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் பஞ்ச கூட்டாளிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க.கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அசேன். இவர் ஆம்பூர் பஜார் பகுதியில் வெங்காய மண்டி மூலம் மொத்த விற்பனை செய்து வருகிறார். இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் இவருடன் இணைந்து வெங்காய விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். தொழிலில் லட்சக்கணக்கில் பணம் புழங்கிய நிலையில், சம்பவத்தன்று அருகில் உள்ள மருந்துக் கடைக்குச் சென்ற மருமகன் ஹமீது மாயமானார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் ஹமீதின் மாமாவான அசேனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஹமீத்தைக் கடத்தி வைத்துள்ளதாகவும் 10லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் ஹமீதை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அசேன் சாதாரணமாக இருந்த நிலையில், 2 மணி நேரம் கழித்து தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ஹமீத்தின் உடலில் கத்தியால் கிழித்து, இரத்த காயங்களை ஏற்படுத்தி, அந்த புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன அசேன் ஆம்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். உடனடியாக ஆம்பூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கடத்தல்காரர்களுக்கு பணம் தருவதாக ஒப்புக்கொண்டு, அவர்கள் வரச் சொன்ன இடத்திற்குச் சென்ற அசேனை காவல்துறையினரும் பின்தொடர்ந்து சென்றனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் கடத்தல் கும்பல் அசேனிடம் பணம்பெற முயன்றபோது, துப்பாக்கி முனையில் காரோடு சேர்த்து மடக்கினர் காவல்துறையினர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அசேனிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் அவரது மருமகன் ஹமீத் கூட்டாளிகளுடன் சேர்ந்து மாமா அசேனை கடத்த திட்டமிட்டுள்ளான். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் சென்று கொண்டிருந்த வெங்காய வியாபாரி அசேன் மீது, ஹமீத்தின் நண்பர்களான சித்திக், அப்ரீத் ஆகியோர் மிளகாய்ப் பொடி தூவி அசேனைக் கடத்த முயன்றுள்ளனர், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அசேனைக் கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹமீது அடுத்த கட்டமாக திட்டம் தீட்டி, தான் கடத்தப்பட்டதாக மாமாவிற்கு போன் செய்து மிரட்டி பணம் பறிக்கலாம் எனக் கூறிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளான். பின்னர் திட்டமிட்டப்படி இரவு வீட்டிலிருந்து மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுடன் காரில் ஏறி, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று, தனது மாமாவிற்கு போன் செய்து கடத்தி விட்டதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்போது அசேன், மருமகன் மீது எந்த அக்கறையும் இல்லாதவர் போல, தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், அடுத்த கட்டமாக ஹமீது தனது கையில் பிளேடால் கீறிக் கொண்டு கையில் கத்தியால் வெட்டி விட்டதாகக் கூறி படமெடுத்து அசேனுக்கு அனுப்பி மிரட்டியதும் பின்னர் பணம் கொடுப்பதாக கூறியவுடன் 10 லட்சம் ரூபாயுடன் போலீசை அழைத்து வந்தது தெரியாமல், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவைத்து சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.

கடத்தலுக்கு திட்டம்வகுத்ததோடு கையை கிழித்துக் கொண்ட ஹமீத் அவனது கூட்டாளிகளான முகமது சித்திக், பையாஸ், அபீத், அப்ரீத் ஆகிய 5 பேரை கைது செய்த காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் அன்பை பணயமாக வைத்து பணம் பறிக்க திட்டமிட்ட ஹமீத் உள்ளிட்ட பஞ்ச கிட்னாப்பர்ஸ் 5 பேரும் தற்போது கம்பி எண்ணி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments