குமரியில் குறைந்தது மழை.. மீட்பு, சீரமைப்பு பணிகள் தீவிரம்...!

0 1976
குமரியில் குறைந்தது மழை.. மீட்பு, சீரமைப்பு பணிகள் தீவிரம்...!

கன்னியாகுமரி மாவட்டதில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், குடியிருப்புக்குள் தேங்கிய வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய துவங்கியுள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்களாக கனமழை நீடித்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக களியலில் 10 செண்டி மீட்டர் மழையும், பாலமோரில் 8 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்த வெள்ளத்தின் அளவு குறைந்தது.

வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்ட இரண்டு முக்கியச் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. குழித்துறை - தேங்காய்ப்பட்டினம், குழித்துறை - அருமனை இடையிலான சாலைகளில் தண்ணீர் வடிந்து மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் பாசனக் கால்வாயின் கரை உடைந்து குமாரகோயில் பகுதியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இருப்பினும், ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. பழையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், சுசீந்திரம் அருகே உதிரப்பட்டி என்ற கிராமத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

குழித்துறை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியில் மழை நீர் வடியாமல் 4 நாட்களாகத் தவித்து வருவதாகக் கூறும் மக்கள், உரிய உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மின் விநியோகமும் நிறுத்தப்பட்டதால், இருளில் மூழ்கி கிடக்கின்றனர். நபர் ஒருவர் தனது குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக வாழை மட்டையை படகு போல் பயன்படுத்தி சென்று வந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், ஆற்றங்கரையை ஒட்டிய வயக்கல்லூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மார்த்தாண்டம் அருகே பேரை மூலக்காவிளையை சேர்ந்த கிருஷ்ணமணி என்பவர், தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறான முல்லையாற்றில் ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், 3 நாள் தேடுதலுக்கு பிறகு மலையாறம் தோட்டம் பகுதியில் கிருஷ்ணமணி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments