குமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு..!

0 2484
குமரியில் முதலமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நீடித்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. வீடுகள், விளை நிலங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தோவாளை அருகே கனமழையால் சேதமடைந்த பெரியகுளம் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, திருப்பதிசாரம், குமாரக்கோவில் ஆகிய பகுதிகளிலும் கால்வாய் உடைந்து, ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் பார்வையிட்டதோடு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு காரில் சென்ற முதலமைச்சருக்கு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, முதலமைச்சருக்கு சால்வையும், வைரமுத்து கவிதைகள் அடங்கிய புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. அத்தோடு, கோவில்பட்டியின் சிறப்பான கடலைமிட்டாயையும் முதலமைச்சருக்கு மாணவிகள் வழங்கினர். பின்னர், மாணவி ஒருவரோடு காரில் அமர்ந்திருந்தபடியே முதலமைச்சர் கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments