ஆற்றின் நடுவே சிக்கிய இளைஞர்கள்... அந்த 4 மணி நேர திக்....திக்...திக்

0 3516
ஆற்றின் நடுவே சிக்கிய இளைஞர்கள்... அந்த 4 மணி நேர திக்....திக்...திக்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாலாற்று வெள்ளத்தில் குளிப்பதாகச் சென்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்ட 7 இளைஞர்களை 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் பாலாற்று பகுதியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அவ்வழியாகச் செல்லும் மேம்பாலத்தின் மீது இருந்தவாறு ஆற்றுக்குள் குதிக்க முயன்றவர்களை பார்த்த அப்பகுதி மக்கள், தண்ணீர் வேகமாகச் செல்கிறது, அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

அவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத 7 பேரும் தங்களுக்கு நீச்சல் நன்றாகத் தெரியும் எனக் கூறியவாறு ஆற்றுக்குள் குதித்தனர்

ஆனால் இளைஞர்கள் கணித்ததை விட வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. அந்த வேகத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் நீரின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஓரிடத்தில் சிறிய அளவிலான மண் திட்டு ஒன்றும், அதன் மீது சிறிய மரம் ஒன்றும் வளர்ந்திருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர், அதனைப் பற்றிக் கொண்டு மற்றவர்களையும் அழைத்துள்ளார். அவர்களும் ஒருவழியாக அந்த மண் திட்டை அடைந்து, மரத்தின் கிளைகளைப் பற்றிக் கொண்டு கூச்சலிட்டுள்ளனர்.

கரையிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கரைப்பகுதிக்கும் இளைஞர்கள் சிக்கியிருந்த இடத்துக்கும் இடையே நீண்ட தூரம் இருந்த நிலையில், தீயணைப்புத்துறையினரிடம் போதிய அளவு கருவிகள் இல்லாததால் அவர்களாலும் இளைஞர்களை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதற்குள் தகவலறிந்து அங்கு அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யா உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். அவர்கள் மூலம் உடனடியாக அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள், ரப்பர் படகுகள் மூலம் இளைஞர்கள் சிக்கியிருந்த இடத்துக்குச் சென்று அவர்களை மீட்டனர்.

பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் நடுவே சுமார் 4 மணி நேரம் உயிருக்குப் போராடிய இளைஞர்கள் 7 பேரும், கரை திரும்பியதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பருவமழை தொடங்கி, நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கிய நாளில் இருந்தே மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

அந்த எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதுபோன்ற விஷப் பரிட்சைகளில் இறங்காமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments