வடியாத வெள்ளம்... மின்விநியோகம் நிறுத்தம், பட்டாளம் மக்கள் படும் பாடு.!

0 2862

சென்னை சில நாட்களாக நீடித்த கனமழையால் பட்டாளம் பகுதியில் தண்ணீர் தேங்கிய நிலையில், 6 நாட்களாகியும் மழைநீர் வடியாததால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையில் ஒருவாரமாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை நின்று இரண்டு நாட்களாகியும் பட்டாளம், புளியந்தோப்பு பகுதியில் தேங்கிய இடுப்பளவு மழை நீர் தற்போது வரை வடியவில்லை.

முனுசாமி நாயுடு தெரு, உத்திரப ஆச்சாரி தெரு, சந்திப் ஆச்சாரி தெரு, நல்லமுத்து ஆச்சாரி தெரு உள்ளிட்ட குடியிருப்புகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக குறிப்பிட்ட சில தெருக்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், குடியிருப்புகள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. அத்திவாசிய தேவைக்கு சிலர் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மின் சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் சேதமடைந்துள்ளது. பட்டாளம் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் புரசைவாக்கம், சூளை, கே.எம் கார்டன், ஓட்டேரி, கன்னிகாபுரம், தட்டான் குளம் பகுதியில் பெய்யும் மழைநீரும் பட்டாளம் பகுதியிலேயே வந்து தேங்குகிறது.

இந்த நிலையில், டிமலஸ் சாலை கால்வாய் தூர்வாரப்படாததே இந்த அவல நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த டிமலஸ் கால்வாய், ஏறக்குறைய ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து பேசின் பிரிட்ஜ் அருகே பக்கிங்காம் கால்வாயில் கலக்கும். பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதாகவும், பராமரிப்பின்றி பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கன்ற்னர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, டிமலஸ் கால்வாய் 300 மீட்டர் தூரத்திற்கு பாதாளத்திலும், எஞ்சியவை நிலத்தின் மேற்பரப்பிலும் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், பாதாளத்தில் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து அதன் மீது சிலர் குடிசை மற்றும் கான்கிரீட் வீடுகளை கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்பு வீடுகளால் கால்வாயை தூர்வார முடியவில்லை எனவும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுகுடியமர்வு செய்த பின்னர், ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றி, டிமலஸ் கால்வாய் தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக நடவடிக்கையாக ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், டிமலஸ் கால்வாயை தூர்வாரி, வெள்ள நீர் வெளியேறும் விதமாக நிலையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதே குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments