காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது... குமரி, நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0 5275

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், சேலம், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அம்மையம், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 17-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 15-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் அதற்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்போது தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வரும் 17ஆம் தேதி வரை வங்க கடல் பகுதிகளிலும், வரும் 14-ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வீசக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து, கன்னியாகுமரியில் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 40 பேர் கொண்ட 2 குழுக்கள் விரைந்துள்ளன.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குமரி மாவட்டத்தின் பிரதான சாலையான ஒழுகிணசேரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கு செல்ல பிரதான சாலையாக இருக்கும் ஒழுகிணசேரி சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதேபோன்று, மார்த்தாண்டம்- தேங்காய்பட்டிணம் சாலை, குழித்துறை - பனச்சமூடு சாலை, திக்குறிச்சி - மார்த்தாண்டம் சாலை, கடையாலுமூடு -களியல் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் முக்கிய சாலையான சுசீந்திரம் சாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பழையாற்றில் பாய்ந்தோடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தானுமலையான் கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்து சுற்றிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

பெருஞ்சாணி அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. குழித்துறை - ஆறுகாணி அருகே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் மார்த்தாண்டம், தேங்காய்ப்பட்டினம், சென்னித்தோட்டம், குழித்துறை, களியல் உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து, வெள்ளக்காடாக மாறின.

தடிக்காரகோணம் தொட்டிப்பாலம் நிரம்பி, மேலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேல் நெல், வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான தென்னந்தோப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments