குமரியில் நீடிக்கும் கனமழை.! தத்தளிக்கும் கிராமங்கள்... தவிக்கும் மக்கள்.!

0 2553

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3ஆவது நாளாக நீடிக்கும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி, சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னிமாரில் 14 செண்டி மீட்டர் மழையும், தக்கலை, சுருளக்கோட்டில் தலா 13 செண்டிமீட்டர் மழையும், சிவலோகம், பெருஞ்சாணி ஆகிய இடங்களில் தலா 12 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 20ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

இதுதவிர மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பி, சிறு சிறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குளச்சலில் உள்ள மசூதியில் தொழுகை நடக்கும் இடம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால், பேயன்குழி இரட்டை கரை கால்வாயில் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் அருகே உள்ள ரயில் பாதையில் புகுந்து ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால், குமரி - திருவனந்தபுரம் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டு உள்ளது

செண்பகராமன் புதூர் என்ற கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் போல் ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. குளங்களில் உடைப்பு ஏற்பட்டு,
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள், முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக படகு மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதிசாரம் கிராமத்தில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.

மேலும் ஈசாந்திமங்கலம் முதல் கீரிப்பாறை செல்லும் சாலையில் ஆங்கங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளமடம் தாழக்குடி சாலைகளும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

கீரிப்பாறை ரப்பர் தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் தற்காலிக பாலம் ஆறாவது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொய்கை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பெருமாள் புறத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகிலுள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம் நிரம்பி வழிந்து கீழே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

நாகர்கோவிலிலிருந்து அருமநல்லூர் செல்லும் சாலையில் 3 குளங்கள் உடைந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சாலையை ஆக்கிரமித்து மறுகால் பாய்ந்து செல்வதால் அங்குள்ள தென்னை தோப்புகள் வாழைத் தோப்புகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலையில் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதன் காரணமாக அருமநல்லூர், ஞானம், தெரிசனங்கோப்பு உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு செல்லும் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நாகர்கோவில் அருகே ஊட்டுவாள்மடம் வசந்த் நகர் பகுதியில் அமைந்துள்ள பெண் குழந்தைகள் காப்பகத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அங்கு இருக்கும் பெண் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனர்.

வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் முழுவதும் மூழ்கின. சிலர் இடுப்பளவு வெள்ளத்தில் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இதனிடையே, கனமழையால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்தமீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, இதனால், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments