குமரியில் கனமழை... தத்தளிக்கும் கிராமங்கள்

0 3018

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடுவதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

புத்தனாறு கால்வாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் தோவாளை, செல்லாந்தி, செண்பகராமன்புதூர், தாழக்குடி, திருப்பதிசாரம், புதுகிராமம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின.

வெள்ளமடத்தில் இருந்து தாழக்குடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை கயிறு கட்டி தீயணைப்புத் துறையினரும், சக பொதுமக்களும் சேர்ந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கைக் குழந்தையை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கைக்குழந்தையையும், அவரது தாயையும், பைக்கில் ஏற்றிக் கொண்டு மாற்று பாதை வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சகாய நகர், ஸ்ரீகுமார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகளை இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புதுகிராமம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வெள்ளம் புகுந்து வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

மேலும், வெள்ளபெருக்கு காரணமாக நெல், வாழை, தென்னந்தோப்புகளில் நீரில் மூழ்கியது. இதனிடையே, பொய்கை அணையில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 27 வயது லட்சுமண் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments