ரிசர்வ் வங்கியின் 2 திட்டங்கள்.. பிரதமர் தொடக்கி வைத்தார்..!

0 3711
ரிசர்வ் வங்கியின் 2 திட்டங்கள்.. பிரதமர் தொடக்கி வைத்தார்..!

சிறு முதலீட்டாளர்கள் அரசின் கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏழாண்டுகளில் நிதியமைப்பிலும், பொதுத்துறை வங்கிகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறு முதலீட்டாளர் நேரடி முதலீட்டுத் திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த முறைமன்ற நடுவர் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடி முதலீட்டுத் திட்டத்தில் சிறு முதலீட்டாளர்கள், இந்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் கடன்பத்திரங்களில் இணைய வழியில் நேரடியாக முதலீடு செய்யலாம். ஒருங்கிணைந்த முறைமன்ற நடுவர் திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் குறைபாடுகள் தொடர்பான புகார்களுக்குத் தீர்வுகாணலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கியின் புதிய திட்டத்தின் மூலம் நாட்டின் முதலீட்டுக்கான பரப்பை விரிவாக்கியுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் முதலீட்டுச் சந்தையை எளிதாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் அணுக வகை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஏழாண்டுகளில் வாராக்கடன் சிக்கலுக்கு வெளிப்படையான தீர்வு கண்டுள்ளதாகவும், நிதியமைப்புகளிலும் பொதுத்துறை வங்கிகளிலும் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசின் கடன்பத்திரங்களில் சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்யப் பாதுகாப்பான வழிவகை செய்துள்ளதாகத் தெரிவித்தார். வங்கித்துறையில் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்க ஒரே முறைமன்ற நடுவர் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments