கனமழையால் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் ; சளைக்காமல் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்

0 2456
கனமழையால் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் ; சளைக்காமல் மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு படகில் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பசியிலும் சளைக்காமல்  மீட்பு பணியில் ஈடுபட்டார். 

இடுப்பளவு தேங்கிய மழை நீர்...! இம்மி கூட சளைக்காத மீட்பு பணி..! என்று ஒற்றை ஆளாய் கல்லும் கண்ணாடித் துண்டுகளும் நிறைந்த வீதிகள் வழியாக படகை பத்திரமாக நகர்த்திச்செல்லும் இவர் தான் படகோட்டி தேசப்பன்..!

அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி என்ற பாடல் வரிகளை காட்சிகளாய் காட்டும் இந்த பகுதி திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்க்கில் நகர், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர், ஆகியவையாகும்..!

இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள் 4 அடி ஆழத்திற்கும் அதிகமாக மழை நீர் வெள்ளம் போல தேங்கி இருக்கின்றது. மழைநீர் புகுந்த வீடுகளில் வசித்தோரை முதற்கட்டமாக பத்திரமாக மீட்டு படகில் ஏற்றி கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் மீனவர் தேசப்பன்.

மாநகராட்சி அதிகாரிகளால் மீட்பு பணிக்கு என்று தேசப்பன் படகுடன் அங்கு அழைத்து வரப்பட்டாலும், தனது பணியை மிகவும் உற்சாகமாக செய்தார். அங்கிருந்து மீட்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் தேவையான உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. மற்ற ஊழியர்கள் சலிப்புடன் கரையேறிவிட்ட நிலையில் மனித நேயம் கொண்ட மீனவர் தேசப்பனோ தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு தெரு தெருவாக தண்ணீரில் படகை தள்ளிக் கொண்டு சென்று தாழ்வான பகுதிகளில் வசித்த குடும்பத்தினரை மீட்டார். மழை நீர் புகுந்த வீடு ஒன்றில் இருந்து பிஞ்சுக்குழந்தையுடன் தாயை மீட்டு படகில் ஏற்றி அழைத்து வந்து உயரமான இடத்தில் உள்ள அந்தப் பெண்ணின் உறவினர் வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டார்.

தொடர்ந்து படகை இயக்கிய தேசப்பனின் கோரிக்கை ஒன்றுதான், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த நேரத்தில் ஏதாவது உணவு வழங்கினால் உதவியாகவும், உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட உந்துதலாகவும் இருக்கும் என்கிறார். ஒவ்வொரு முறை கரைக்கு வரும் போதும் அவரிடம் வம்பிழுக்க கரையேறி மது அருந்தி வந்த சில போதை ஆசாமிகள் காத்திருந்தனர்.

5 மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சி அகற்ற முயன்றும், வெளியேற்ற இயலாத அளவுக்கு தாழ்வான இடங்களில் குடியிருப்போருக்கு புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்தும் அதனை மழைகாலத்திற்குள் முடித்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தவறிய குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை மீட்பு பணியில் ஈடுபடுத்தினால் பெருமழையால் மக்கள் படும் கஷ்டத்தை அவர்கள் உணரவழிகிடைக்கும் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments