கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் மழை குறையும்

0 5324

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும், வட தமிழக கடற்பகுதிக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் 5.30 மணி முதல் 6.30 மணி வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையேறிய போது, தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்தும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னைக்காக விடப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சென்னையில் கனமழை மற்றும் காற்றுக்கான ரெட் அலெர்ட் தொடர்ந்து இருக்கும் என்றும் அதிகனமழைக்கான வாய்ப்பு தற்போது குறைவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துள்ள நிலையில், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 13-ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments