நீடிக்கும் கனமழை... நிரம்பும் நீர்நிலைகள்

0 4786

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பூண்டி நீர்த்தேக்கம் அருகே உள்ள உபரிநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மூழ்கி சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் இருசக்கர வாகனங்களில் பாலத்தை கடந்து செல்கின்றனர்.

 செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,240 கன அடி வீதமாக அதிகரித்துள்ள நிலையில், 2ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

 திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 36,354 கன அடி வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவானைக்காவல் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை, வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். மேலும், கொள்ளிடம் ஆற்றில் சலவை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறவும், மீன்பிடிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவான 23 அடியை எட்டியுள்ள நிலையில், அதன் நீர்வரத்து ஒரே நாளில் வினாடிக்கு 4ஆயிரம் கன அடி வீதம் அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீர் அப்படியே தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. இதனிடையே, கடல் போல் காட்சியளிக்கும் மதுராந்தகம் ஏரியின் ட்ரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் காரணமாக பரளியாறு, கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திக்குறிச்சி, சிதறால், முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வாழை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு போன்ற விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது நாளாக 119 அடியாக நீடிக்கும் நிலையில், அங்கிருந்து வினாடிக்கு 16ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த குண்டாறு அணைக்கட்டு ஒரே ஆண்டில் 2ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டை வேடிக்கை பார்க்க யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 71 அடி மொத்த உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து வினாடிக்கு 3,069 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 3,569 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று 500 கன அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

 காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 30ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் மாயனூர் கதவணையை கடந்து செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments