தொடர் மழையால் தேங்கிய தண்ணீர்.! சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல்... போக்குவரத்து மாற்றம்

0 3463

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் தொடந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் நகரில் சில இடங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தும் சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் மழையால், நகரின் 11 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவை மூடப்பட்டுள்ளன. வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்பாதை மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், துரைசாமி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, காக்கன் சுரங்கப்பாதையும் மூடப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மழை நீர் தேங்கியுள்ளதால் நகரின் சிலப் பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. கே.கே.நகர் முதல் ராஜமன்னார் சாலை வரையிலும், மயிலாப்பூர் முதல் டாக்டர் சிவசாமி சாலை வரையிலும், ஈவிஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரையும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பெரவள்ளூர் முதல் 70 அடி சாலை இடையேயும், புளியந்தோப்பு முதல் டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.ஹெச்.சாலையில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளதாகவும், குமணன்சாவடி குன்றத்தூர் ரோடு ஒருபக்கம் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதாகவும், வாணிமஹால் - பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனம் திருப்பிவிடப்படுவதகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெரம்பூர் பேரக்ஸ் சாலை - அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப்பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு, ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும் என்றும் புளிந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments