130 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.... 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்

0 13989

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்பொழுது சென்னையை நெருங்கி வரும் நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும், வட தமிழக கடற்பகுதிக்கும் இடையே சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தருமபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்த அம்மையம், வரும் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்து 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments