மனிதனுக்கு மழைநீர் சொல்லும் பாடம் என்ன? கழுகுப் பார்வை காட்சிகள்

0 2897

சென்னை அடுத்த மாங்காடு மற்றும் மலையம்பாக்கம் இடையே அமைந்துள்ள பகுதிகளில் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளால்  நூற்றுக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் வடிய இடமில்லாமல் செய்த மனிதத் தவறை, கழுகுப்பார்வை காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை அடுத்த மாங்காட்டிற்கும் மலையம்பாக்கத்துக்கும் எல்லையில் அமைந்துள்ள ஜனனி நகர், சீனிவாச நகர் , லட்சுமிபுரம் மெயின்ரோடு குளக்கரை பகுதிகளை மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது..!

குளக்கரையில் மட்டுமல்லாமல் நடு குளத்துள்ளேயே சிலர் ஆக்கிரமித்து அடுக்குமாடி வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இந்த குளத்துக்கு மழைநீர் செல்லகூடிய நீர்வழிப்பாதையை அடைத்து உருவாக்கப்பட்டுள்ள ஜனனி நகர் ஆக்கிரமிப்புவாசிகளால் , முறையான அனுமதியுடன் பட்டா நிலங்களில் வீடுகட்டிய குடியிருப்பு வாசிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

ஜனனி நகரை கழுகுபார்வையாக பார்த்தால் அங்கு நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்திருக்கும் வெள்ளத்திற்கு காரணம், சரியான போக்கிடமில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த நகரில் உள்ள வீடுகள் முறையாக அனுமதிபெற்று கட்டப்பட்டிருந்தாலும். இடையில் திடீரென்று முளைத்த ஒரு சில ஆக்கிரமிப்புக் கட்டிடங்களாலும், முறையான வடிகால்கள் அமைக்கப்படாததாலும் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக ... 4 நாட்களாக மழை நீர் வடியவில்லை என்று சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் சலித்துக்கொண்டாலும், மழைபெய்தால் தங்கள் பகுதியில் 3 அடி உயரத்துக்காவது தண்ணீர் தேங்கும் என்பதை அறிந்தே வைத்திருக்கின்றனர் சீனிவாச நகர் ஆக்கிரமிப்பாளர்கள்..!

மழை நீர் தேங்குவதற்கு தங்களுடைய ஆக்கிரமிப்பு குடியிருப்புக்கள் தான் காரணம் என்பதையும் தெரிந்தே வைத்திருப்பதால் மழை நீர் தேங்க ஆரம்பித்தவுடன் பலர் வீடுகளை பூட்டி, நாய்குட்டிகளை மட்டும் விட்டுவிட்டு உறவினர் வீடுகளை நாடிச்சென்று விடுகின்றனர்..!

லட்சுமிபுரம் சாலைக்கு கீழ் பகுதிகளில் தேங்கிய மழை நீரை குளத்திற்குள் வழிவைக்க விடாமல் குளத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகளை உருவாக்கியுள்ள செல்வாக்குமிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்த நிலையில் நிலைமையின் அவசரத்தை உணர்ந்து அதிகாரிகள் மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்த மனிதன் மறந்திருந்தாலும் மழைகாலங்களில் இது எங்கள் இடம் என்பதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு சற்று அழுத்தமாகவே உணர்த்துகின்றது குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments