சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

0 4060

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் இருந்து விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.

தெற்கு வங்கக் கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென்கிழக்கே நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது.

இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால் ஏற்கனவே சாலையில் நீர் தேங்கியிருந்த தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேலும் நீர் தேங்கியது. இப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால் 2 அடி உயரத்திற்கு மழை நீர் பெருக்கெடுத்தது.

இதேபோல் கே.கே நகர், நெசப்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளிலும் சாலைகளில் மேலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரில் ராஜா முத்தையா தெருவில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்களை ஓட்டிச் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அண்ணா சாலை அரசினர் தோட்டம் மெட்ரோவில் மழைநீர் புகாமல் இருப்பதற்காக அதிகாரிகள் மெட்ரோ நுழைவு வாயில் பகுதியில் கற்கள் , மணல் மூட்டைகள் மற்றும் மர தடுப்புகள் மூலம் தண்ணீர் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்துள்ளனர். பட்டாளம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீருடன், கழிவு நீரும் கலந்துள்ளதால் வாகனங்கள் மூழ்கும் நிலையில் உள்ளன.

பாரிமுனை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பிராட்வே சாலை, ரிச்சி தெரு மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ சந்திப்பு பகுதியில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராயப்பேட்டை பெர்தோ தெருவில் சுமார் 60 வருடம் பழமையான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.

சென்னையில் 12 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு முக்கியப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரியமேடு காவல் நிலையம் அருகே பெருமளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

பாரிமுனை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பிராட்வே சாலை , உயர்நீதிமன்ற மெட்ரோ சந்திப்பு பகுதியில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

பட்டாளம் டிமலஸ் சாலையில் அதி கனமழை காரணமாக 3 அடிக்குமேள் தற்போது வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் செல்வதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments