வங்கக்கடலில் உருப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் - அமைச்சர்

0 5853

வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாகவும், அது நாளை மாலை புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் இன்று காலை உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, தாழ்வு மண்டலம், அதிகாலைவேளையில், வட கடலோர தமிழக பகுதியை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே மாலையில் கரையை கடக்க கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ள நிலையில், மாமல்லபுரம் அருகே கரைக் கடக்க வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை காலை முதல் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதால், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 13ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments