நாகையை உலுக்கிய கனமழை.. வீடுகள், விளைநிலங்கள் பாதிப்பு..!

0 3028
நாகையை உலுக்கிய கனமழை.. வீடுகள், விளைநிலங்கள் பாதிப்பு..!

நாகை மாவட்டத்தை கனமழை புரட்டிப்போட்டதில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. வீடுகளுக்குள் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில், செய்வதறியாது மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கடந்த ஒரு வார காலமாகவே, நாகை மாவட்டத்தில் பலத்த மற்றும் மிதமான மழை என தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாளில் மழை தீவிரமடைந்து செவ்வாய்கிழமை கனமழை கொட்டித்தீர்தது.

செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கி புதன்கிழமை காலை வரை சுமார் 31 செண்ட்டி மீட்டர் அளவுக்கு கொட்டிய கனமழையில், திருப்பூண்டி, கருங்கண்ணி, மேலப்பிடாகை. கீழையூர், காரப்பிடாகை பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி, விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன.

அப்பகுதியில் வடிகால்வாய்கள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததே மழை நீர் தேங்கக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். விளைநிலங்கள் சேதம் ஒருபுறம் இருக்க, பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரே நாளில் அதிகளவு மழை பெய்ததால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

தலைஞாயிறு பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ள நிலையில் மல்லியன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓரடியம்புலம் கிராமம் அருகே கரையில் 20 அடி தூரம் வரை உடைந்தது. அதிலிருந்து வெளியேறிய வெள்ள நீர் ஓரடியம்புலம், வாட்டாகுடி, உம்பளச்சேரி, சாக்கை , ஆய்மூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments