கனமழையால் வெள்ளம் பல்லாயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

0 1978

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரம் ஏக்கரில் நட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாகப்பட்டினத்தில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், பூதலூர், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேலான பரப்பில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பத்து நாட்களாக நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் அழுகிப் போனதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் காந்திநகரில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பாலையூரில் நடுவதற்காக உழுது தயார் செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் குளம்போல் காட்சியளிக்கிறது. நடுவதற்காகப் பிடுங்கிக் கட்டுகளாகக் கட்டியிருந்த நாற்று முடிகள் வெள்ளத்தில் மிதந்து கரையொதுங்கியுள்ளன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூரில் வயல்களில் புதிதாக நட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாயைத் தூர்வாரி நீரை வடியச் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments