சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேக்கம்... கழிவுநீரும் கலந்ததால் பாதிப்பு.!

0 2018

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும், கழிவுகளும் கலந்துள்ளதால் தெருவில் நடமாட முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை அசோக் நகரில் 100 அடி சாலை , பி.டி.ராஜன் சாலை, காமராசர் சாலை ஆகியவற்றில் 4 நாட்களாகத் தேங்கியுள்ள மழைநீர் வடியவில்லை. இதனால் அப்பகுதி தெருக்கள் முழுவதும் குளம்போலக் காட்சியளிக்கின்றன.

சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கோடம்பாக்கம் மேம்பாலத்திலும் கான்கிரீட் கம்பி வெளியில் தெரியுமளவுக்கு உடைந்து பல குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் 3 நாட்களாகத் தேங்கியுள்ள மழைநீர் வடியாத நிலையில் அதில் கழிவுநீரும் கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கலைஞர் நகர் குடியிருப்புப் பகுதிகளில் சாலையில் முறிந்த மரக்கிளைகளையும், தாழ்வாகத் தொங்கும் மரக்கிளைகளையும் வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் நான்கு நாட்களாக மோட்டார் மூலம் இறைத்தும் சாலையிலும் தெருக்களிலும் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

பெரவள்ளூரில் சாலையில் நான்கு நாளாக மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் படகு மூலம் சென்று வருகின்றனர். 

சென்னை தரமணியில் சாலைகளில் தேங்கியுள்ள நீரில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments