ஏரியை ஆக்கிரமித்து ஏரியாவாக்கியவர்களால் ஏரி நீரோடு மல்லுக்கட்டும் மக்கள்..! விபரீத வாட்டர் வாக்கிங்

0 5516

கோடைகாலங்களில், சென்னையின் நீராதாரமாகப் பயன்பட்ட, ரெட்டேரியின் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் நிரம்பி வழிந்த நீர், மாதவரம் அறிஞர் அண்ணா நகர், வெஜிடேரியன் நகர் மற்றும் மஞ்சம்பாக்கம் வழியாக வெளியேறி வருகின்றது.

ஆபத்தை உணராமல் தண்ணீரை ஊருக்குள் பார்த்த உற்சாகத்தால், சிலர் குழந்தைகளுடன் மீன்பிடித்தும் விபரீதமான முறையில் வாட்டர் வாக்கிங்கிலும் ஈடுபட்டனர்

சென்னையில் ஏரியையும், ஏரியின் நீர்வழிப்பாதையையும் ஆக்கிரமித்து புதிய ஏரியாக்களை உருவாக்கியவர்களுக்கு ஏரி ஒவ்வொரு பெருமழை காலங்களிலும் தக்க பாடங்களை கற்றுக் கொடுத்து வருகின்றது. அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் அறிஞர் அண்ணா நகரில் ரெட்டேரியையொட்டி சி.எம்.டி.ஏ ஒப்புதல் உடன் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு அருகில் ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்தவர்களால் , ரெட்டேரி உபரி நீர் முறையாக செல்ல வழியின்றி அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.

நீரின் வேகத்துக்கு தாக்குபிடிக்க இயலாமல் அங்கிருந்த தற்காலிக தரைபாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த பாலத்தை கற்களை கொண்டு ஜே.சி.பி மூலம் சமன்படுத்திக் கொடுத்தனர்.

நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதன் காரணமாக ரெட்டேரி நீர் முறையான பாதை இன்றி காலியான நிலங்கள் வழியாக சாலையில் பாய்ந்தது

ஊருக்குள் ஏரி நீர் புகுந்து மலை பாதையில் பாய்ந்து செல்லும் அருவி போல பாய்ந்தோடிக் கொண்டிருக்க, பாலத்தை சரியும் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு துணையாக உள்ளூர் பிரமுகர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்க , சிலர் எந்த ஒரு கவலையுமின்றி தூண்டில் போட்டு சின்சியராக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்

ரெட்டேரி நீர், புழல் வெஜிடேரியன் நகருக்குள் சாலையை தாண்டி பாய்ந்தோடிய நிலையில் ஏரி உடைந்தால் என்னவாகும் ? என்ற சிறு பயமுமில்லாமல், கேளிக்கை பூங்காவில் நுழைந்தது போன்று குழந்தைகளும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்களும், அந்த தண்ணீரில் மீன் பிடித்தும் குதித்தும், குளித்தும் விளையாடினர்

இன்னும் சில அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இப்படி வந்தால் தான் தங்கள் ஏரியாவில் தண்ணீரையே பார்க்க முடியும் என்பது போல குடும்பத்தினருடன் விபரீத வாட்டர் வாக்கிங்கில் ஈடுபட்டனர்

 நிரம்பி வழிந்து பாய்ந்தோடிய ரெட்டேரி நீரானது பல தொழிற்சாலைகளை சூழ்ந்து இறுதியில் , புதிய பாலம் பணிகளுக்காக உடைக்கப்பட்ட கரைவழியாக புழல் ஏரியின் உபரி நீர் கால்வாயை சென்றடைந்தது.

அதே போல மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாக்கம் சாலையில் தேங்கிய மழை நீருடன் புழல் ஏரி உபரி நீர் சூழந்ததால், மஞ்சம்பாக்கம் பிரதான சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த தடைவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டது

அந்த சாலையின் இருபக்கமும் முழங்காலுக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியதால் டேங்கர் லாரியார்டுகளை வெள்ளம் சூழந்தது. இந்த வெள்ளத்தில் குறுக்கு சாலை வழியாக புகுந்த சில வாகனங்கள் சிரமப்பட்டு நகர்ந்தது

மழைகாலங்களில் அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசும் , அதிகாரிகளும் பலமுறை அறிவுறுத்தியும் அதனை காதில் வாங்காமல் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக்கொண்டும், ஆங்காங்கே சுற்றித்திரிந்தபடியும் இருந்தனர்

சென்னையில் ஒரு பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் புகுந்த மழை நீரால் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க, சிலர் தங்கள் பகுதியில் பாய்ந்தோடும் ஏரி நீரில் ஆபத்தை உணராமல் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டு வருவது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments