ஆக்கிரமிப்பாளர் பிடியில் வேகவதி ஆறு..! சாக்கடை தூய்மையாகுமா ?

0 2125

காஞ்சிபுரத்தில் பாலாற்றின் கிளை நதியான வேகவதி ஆறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறுகிப்போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

image

20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் ஆதாரமாக விளங்கிய வேகவதி ஆறு தற்போது கழிவு நீர் கால்வாயான பின்னணி

வேலூர் அருகே பாலாற்றிலிருந்து தனியாக பிரிந்து கிளை நிதியாக ஓடி.. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த வேகவதி ஆறு தான் இன்று சாக்கடை கால்வாயாக காட்சி அளிக்கிறது..!

காஞ்சிபுரத்தை அடுத்த திருமுக்கூடலில் சென்று மீண்டும் பாலாற்றுடன் இணையும் இந்த வேகவதி ஆறு இன்று ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி தவிக்கிறது. காஞ்சிபுரம் முழுவதும் செல்லக்கூடிய வேகவதி ஆற்று நீர்தான் கீழ்கதீர்பூர், மேல்கதீர்பூர், தாமல், தேனம்பாக்கம் உள்ளிட சுற்றுவட்டார கிராம மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நதியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளமும் செழிப்பாக இருந்தது.

image

ஆனால் தற்போது காஞ்சிபுரம் நகரத்திற்குள் இந்த ஆற்றின் கரைகளையொட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளாலும், நகரில் உள்ள தொழில் நிறுவனங்களின் கழிவுகள் கலப்பதாலும் வேகவதி ஆற்று நீர் மாசடைந்து கழிவுநீராக மாறிப்போயுள்ளது. போதாக்குறைக்கு பட்டு நூலுக்கு போடப்படும் சாயக்கழிவுகளும் இந்த ஆற்றில் வந்து சேர்வதால் முழுமையாக மாசடைந்த கழிவு நீர் ஓடையாக காட்சி அளிக்கிறது வேகவதி ஆறு..!

ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் கடந்த 2015 வெள்ளத்தின் போது பலர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. அதன் பிறகும் ஆக்கிரப்பாளர்கள் அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவு காரணாமாக அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது ஒருபுறம் என்றால் ஆற்றின் கரையோரங்களில் இன்றும் தொடரும் மணல் கொள்ளை தடுக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. லாரிகள், வேன்கள் மூலம் மணல் கடத்தினால் சிக்கி கொள்வோம் என்று இரு சக்கர வாகனங்களில் மணலை கடத்திச்சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து அங்கிருந்து லாரிகளில் கடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. நாம் படம் பிடிப்பதை பார்த்துவிட்ட மணல் கடத்தும் நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடிய காட்சிகளையும் காண முடிந்தது

காஞ்சி மக்களின் தாகம் தணித்த வேகவதி ஆற்றை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தவும், 169 கோடி ரூபாயில், கீழ் கதிர்ப்பூர் கிராமத்தில், 2,112 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வீடும், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டவை. 1.5 லட்சம் ரூபாய் மத்திய அரசும், ஐந்து லட்ச ரூபாய் ரூபாய் மாநில அரசும் மானியமாக வழங்குவதாகவும் மீதமுள்ள, 2.5 லட்சம் ரூபாய் பயனாளிகள் வழங்க வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து வேகவதி ஆற்றை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments