மழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3449

சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் 3ஆவது நாளாக பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகம் ஒன்றில் உணவினை ஆய்வு செய்தார். 

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ரமணா நகரில் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். 

செம்பியத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர், உணவினை சுவைத்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். 

கொளத்தூர் அக்பர் ஸ்கொயர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கினார்.

சென்னை பெரம்பூர் சிவ இளங்கோ சாலை, பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் கனமழையால் தேங்கியுள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

சென்னை கொளத்தூர் கோபாலபுரம் ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கொளத்தூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் அவர்களுக்காக உணவுகள் தயாரிக்கப்பட்டு வரும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

கொளத்தூரில் உள்ள கே.சி.கார்டன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுகளை வழங்கினார். 

சென்னை போரூர் பூந்தமல்லி சாலையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தயாரிக்கப்பட்ட உணவினை சுவைத்து, அதன் தரத்தை ஆய்வு செய்தார்.

இதற்கிடையே, சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் 3-ஆம் நாளாக ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும், மழை வடிகால் பணி மேற்கொள்வதாக கூறியும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 771 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால், மழை நீர் வேகமாக வடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், மாநகராட்சி சார்பில் மூன்று வேளைகளும் உணவுகள் தயாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments