8 வருட காதல்… காதலிக்கு திருமணம், சடலமான காதலன்..! கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு

0 7951

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  மாயமான இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால், பெண்ணின் உறவினர்கள் கடத்திகொலை செய்ததாகக் கூறி சடலத்தை பெற மறுத்து இளைஞனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான இவர் பெயின்டிங் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தார். சுரேஷ்குமாரும் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

ஆரல்வாய்மொழி அருகே கலைகல்லூரியில் இருவரும் படித்துக் கொண்டிருந்த போது மலர்ந்த காதல் 8 வருடங்களை கடந்த நிலையில், வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால் காதலர்களை சேர்த்துவைக்க பெண்ணின் உறவினர்கள் மறுத்ததோடு பெண்ணிற்கு தாழக்குடியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர் .

அந்தத்திருமணத்திற்கு சுரேஷ்குமார் இடையூறு ஏற்படுத்திவிடுவார் என எழுந்த சந்தேகத்தால் பெண்ணின் குடும்பத்தினர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் நேற்று சுரேஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு வருமாறு அவரை அழைத்தனர். அதைத்தொடர்ந்து காவல்நிலையத்திற்கு செல்வதாக புறப்பட்டு சென்ற சுரேஷ்குமார் பின்னர் அப்பகுதி அருகே உள்ள தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தில் காயங்கள் காணப்பட்ட நிலையில் சுரேஷ்குமாரின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்

இதுதொடர்பாக முதல்அமைச்சரின் புகார் பிரிவு மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ்தரப்பில் கூறியதைத் தொடர்ந்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் முன்பு சுரேஷ்குமாரின் உறவினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரேஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் கொலைக்கு காரணமான நபர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதன்பின்னரே சடலத்தை கைப்பற்றுவோம் என தெரிவித்தனர். இதன்காரணமாக சுரேஷ்குமாரின் சடலம் தற்போது வரை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞன் மர்மமான முறையில் மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில் சுரேஷ்குமார் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற குழப்பம் நீடித்து வருவதால் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று சுரேஷ்குமாரின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே, சுரேஷ்குமார் மரணத்தின் நிஜப்பின்னணி வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments