சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை... நகரை சூழ்ந்த மழை நீர்

0 4090

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய தொடந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு அவ்வப்போது கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து நேற்று பிற்பகல் வேளையில் இருந்து விட்டு விட்டு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. 

இந்த கனமழையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பாரிமுனை, தியாகராயநகர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற தீயணைப்புத் துறையினரின் படகு  கொண்டு வரப்பட்டுள்ளது

மேலும், தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால், வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்ற பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் தீயணைப்பு துறையினரின் படகு மூலம் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து அழைத்து செல்லப்பட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டையில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை வியாசர்பாடியில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.

விடிய விடிய பெய்த கனமழையினால் எழும்பூரின் பிரதான சாலைகளில் வடியாத மழைநீர், முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது.

நேற்று முதல் பெய்த தொடர் கனமழையால் சென்னை தேனாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன் ஆய்வு மேற்கொண்டார்.

தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைப் பாதிப்புகளை பார்வையிட்ட அவர், தண்ணீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments