காலண்டரில் அக்னி கலசம், பணிந்தது ‘ஜெய்பீம்’ படக்குழு..! சாதிக் குறியீட்டு பரிதாபம்

0 39738

உண்மைக்கதை என்று சொல்லப்படும் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதை காட்டுவதற்கான குறியீடாக, அவரது வீட்டில் அக்னி கலசம் அச்சிடப்பட்ட காலண்டரை தொங்கவிட்டதால் கடுமையான கண்டனம் எழுந்தது.  நிஜத்தை திரித்து வில்லனின் சாதியை  மாற்றியதால் எழுந்த எதிர்ப்புகளுக்கு பணிந்து ஜெய்பீம் படக்குழு அக்னி கலசத்தை நீக்கியுள்ளது

ஜெய்பீம் ... நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்த படத்தின் கதை கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவமான போலீஸ் லாக்கப் டெத் ஒன்றை அடிப்படையாக கொண்ட கதை என கூறப்பட்டது.

அதற்கேற்ப படத்தில் வழக்கறிஞராக வரும் நாயகனுக்கு சந்துரு என்றும், பாதிக்கப்பட்ட ராஜாகண்ணுவுக்கும் உண்மையான சம்பவத்தில் உள்ள அசல் பெயர்களை சூட்டிய இயக்குனர் டி.ஜே ஞானவேல், கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளரின் உண்மை பெயரான அந்தோணிச்சாமி என்பதை சூட்டாமல், அந்த கதாபாத்திரத்துக்கு குரு மூர்த்தி என்று பெயர் சூட்டியதோடு, வட மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதியின் பின்புலத்தை கொண்டவர் என்பதை காட்டுவதற்காக அக்னி கலசம் அச்சிடப்பட்ட சாதி சங்க காலண்டர் ஒன்று அவர் வீட்டில் இருப்பது போன்று காட்சிப்படுத்தி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர் மன்ற பேனர்களுக்கு தீவைக்கப்பட்டது.

இந்த படத்திற்கான வட்டார வழக்கு வசனங்களை திருத்திக் கொடுத்த குணசேகரன் தொடங்கி, நிஜ சம்பவத்தில் காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவிக்கு உற்ற துணையாக நின்று போராடி கொலைகார போலீசாருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முதனை ஊராட்சி மன்ற துணைதலைவர் கோவிந்தன் வரை ஏராளமானோர் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அதனை மறைத்து அந்த சாதியினரை வன்முறையாளர்கள் என்ற நோக்கில் காட்டுவதற்காக நிஜத்தை திரித்தி, வன்மத்தோடு காட்சி படுத்தி இருப்பதாக கூறி வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள் மொழி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அக்னி கலச காட்சியையும், குரு மூர்த்தி என்ற பெயரையும் மாற்றுவதோடு படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக சூர்யா, அக்னி கலச காலண்டரை அகற்ற ஜெய்பீம் படக்குழுவினரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அக்னி கலசத்திற்கு பதிலாக கிராபிக்ஸ் மூலம் லட்சுமி சாமி படம் அச்சிடப்பட்ட காலண்டராக காட்சியை மாற்றியுள்ளது ஜெய்பீம் படக்குழு..! லட்சுமியின் படமாக மாற்றப்பட்டதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அசல் கதை என்று கூறிவிட்டு, நாயகனுக்கும் , பாதிக்கப்பட்டவருக்கும் அசல் பெயர்களை சூட்டிவிட்டு, வில்லன் நபருக்கு மட்டும், அந்தோணிசாமி என்ற அசல் பெயரையும் அவர் சார்ந்த மதத்தின் குறியீடுகளையும் காட்சியில் வைக்காமல் மற்ற மதத்தை காயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று சூர்யாவிடம் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அண்மைகாலமாக, குறியீட்டால் உணர்த்துவதாக நினைத்து தமிழ் திரை உலக இயக்குனர்கள், தங்களின் சாதிய மனோபாவத்தை காட்சிகளால் ரசிகர்களின் மனதில் திணித்து சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments