MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கு 38,271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மருத்துவக் குழு தகவல்

0 1102

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, கடந்த 8 நாட்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வாங்கினால், புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 445 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 355 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

அதேபோல்,  இவற்றுக்கான விண்ணப்ப விநியோகம், கடந்த 11ஆம் தேதி தொடங்கி, திங்கள் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கு 24 ஆயிரத்து 933 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13 ஆயிரத்து 338 விண்ணப்பங்களும் என, கடந்த 8 நாட்களில் மொத்தம் 38 ஆயிரத்து 271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் தேர்வுக் குழு கூறியுள்ளது.

ஆன்லைனில் பதவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளை மாலையே தெரியவரும் எனக் கூறியுள்ள அதிகாரிகள், இதுவரை 36 ஆயிரத்து 304 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது

மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரத்தையும் வெளியிட்டுள்ள அதிகாரிகள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ கேட்டால், மருத்துவத் தேர்வுக் குழு செயலாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களை www.tn health.org, www.tn medical selection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments