புகை மண்டலத்தால் திணறிய சென்னை - அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் திணறல்!

0 3641

தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததால், சென்னையின் பல்வேறு இடங்களில் புகைமண்டலம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

சென்னை மாநகரில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி சராசரியாக காற்றில் மாசு அளவு 89 ppb என்ற அளவில் இருந்தது. பின்னர் பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்த நேரமான பட்டாசு வெடிக்கும் நேரம் கடந்து, இரவு 8 மணி நிலவரப்படி காற்றின் தரம் 108 ppb என கடுமையாகக் குறைந்தது. இந்நிலையில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தில் அதிகளவில் பட்டாசு வெடித்ததால், சாலைகள், தெருக்களில் புகைமண்டலம் சூழ்ந்தது. சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும், கிண்டி, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமண்டலம் சூழ்ந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

வடபழனி மற்றும் கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டத்தினால் சாலையில் சிக்னல் விளக்குகள் மிகவும் மங்கலாகத் தோன்றின. இதேபோல், தீக்காயங்கள் மற்றும் அவசர உதவிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளும் புகை மூட்டத்தினால் பாதிப்படைந்தனர். புகை மூட்டம் காரணமாக, காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட நுண் துகள்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

மாலையில் லேசான மழை பெய்ததாலும், மேகமூட்டம் காரணமாகவும், பட்டாசுகளின் நுண் துகள்கள் வளிமண்டலத்திற்குச் செல்ல முடியாமல் தொடர்ந்து தரைப் பகுதியில் நின்றதால் புகை மண்டலம் தொடர்ந்து நீடித்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மஞ்சள் நிற அறிவிப்பின் காரணமாக சுவாசிப்பதற்கு அசவுகரியமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments