ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்

0 2420
ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, தாய்நாட்டின் பாதுகாப்புக் கவசமாக ராணுவ வீரர்கள் விளங்குவதாகவும், அவர்களால் தான் மக்கள் மகிழ்ச்சியாக விழாக்களைக் கொண்டாடவும், இரவில் நிம்மதியாக உறங்கவும் முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளையொட்டி ஜம்மு காஷ்மீரின் நவ்சேரா ராணுவ முகாமுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பிரதமரை வரவேற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் பாரதத் தாய்க்கு வெற்றி என முழக்கமிட்டனர். ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

 

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்காகக் கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துக்களுடன் தான் வந்துள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் என்கிற முறையில் இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக வந்து தீபாவளியைக் கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.

தாய்நாட்டின் பாதுகாப்புக் கவசமாக ராணுவ வீரர்கள் விளங்குவதாகவும், அதனால்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக விழாக்களைக் கொண்டாடவும், இரவில் நிம்மதியாக உறங்க முடிவதாகவும் தெரிவித்தார்.

நமது அமைதியைச் சீர்குலைக்க எதிரிகள் முயன்றபோது ஒவ்வொரு முறையும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லைக்குள் பயங்கரவாத முகாம்களை ஊடுருவித் தாக்கியதன் மூலம் இந்தப் படைப்பிரிவு இந்தியர் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ளச் செய்வதாகக் குறிப்பிட்டார்.

எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து உட்கட்டமைப்பைச் செய்துள்ளதன் மூலம் படையினரையும் தளவாடங்களையும் உடனடியாகக் கொண்டு செல்ல முடிவதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், படைப் பிரிவிலும், பாதுகாப்புத் துறையின் பல்வேறு நிறுவனங்களிலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக டெல்லியில் இருந்து காஷ்மீருக்குச் செல்ல விமான நிலையத்துக்குப் பிரதமர் மோடி காரில் புறப்பட்டுச் சென்றபோது பாதுகாப்புக் கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் இன்றிக் குறைந்தபட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

 SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments