தீபாவளித் திருநாள் பொதுமக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டம்

0 2122

தீபாவளித் திருநாளில் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், கோவில்களுக்குச் சென்று வழிபட்டும் பொதுமக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளித் திருநாளையொட்டிச் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை முதலே பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கி வீட்டில் விளக்கேற்றியும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடத்தப்பட்டன. தீபாவளித் திருநாளையொட்டிக் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

தீபாவளியையொட்டி சேலம் ராஜகணபதி கோவில், ஆஞ்சநேயர் கோவில், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் ஆகியவற்றில் அதிகாலை முதலே பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து வணங்கிச் சென்றனர்.

கோவை மசக்காளிப்பாளையத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் தலைதீபாவளியையொட்டிப் பெரியோரின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றனர். அவர்கள் பரிசளித்த புத்தாடைகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். வீட்டின் முன் மத்தாப்பு, குலைவாணம் ஆகிவற்றைக் கொளுத்தி மகிழ்ந்தனர். வீட்டில் செய்த தின்பண்டங்களைப் பிறருக்குக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியன்று பொதுமக்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தும் இனிப்புகள் வழங்கியும் அன்பை வெளிப்படுத்தினர். புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தீபாவளியையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.


தஞ்சாவூரில் தலைதீபாவளியைக் கொண்டாடும் புதுமணத் தம்பதிகள் குடும்பத்தில் உள்ள பெரியோரின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றனர். புத்தாடை அணிந்து வீடு முழுவதும் தீபம் ஏற்றிக் குடும்பத்தினர்களுடன் மத்தாப்பு கொளுத்தி வெடி வெடித்துக் கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments