நீடிக்கும் கனமழை.. நிரம்பும் அணைகள்

0 1536
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 120 அடி மொத்த உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 11ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, தனது மொத்த உயரமான 90 அடியில் 87.7அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், தாராபுரம் மூலனூர், கரூர் உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வரும் நிலையில், குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி திடீரென உருவான காட்டாற்று வெள்ளத்தால், நடைபாதைகள் சேதமடைந்துள்ளன. தடுப்பு கம்பிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறையும் சேதமடைந்து உள்ளது.

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102அடியாக நீடித்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 2800 கனஅடி வீதமாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4977 கனஅடி வீதமாக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது மொத்த உயரமான 32அடியில் 27.5அடியை எட்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments