ரெஸ்டாரண்டில் வெளியிட சூர்யாவின் 'ஜெய் பீம்'க்கு தடை..! உணவகம் இரவில் மூடப்பட்டது..!

0 6584
ரெஸ்டாரண்டில் வெளியிட சூர்யாவின் 'ஜெய் பீம்'க்கு தடை..! உணவகம் இரவில் மூடப்பட்டது..!

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை, அவிநாசியில் உள்ள ரெஸ்டாரண்டில் அகன்ற திரையில் திரையிட திட்டமிட்டு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சிறப்புக் காட்சி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. நல்லா இருந்த உணவகம் ஜெய்பீமால் இரவே மூடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் 1 ந்தேதி இரவு அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் கோவை மாவட்ட சூர்யா ரசிகர்கள், ஜெய்பீம் படத்தை அகன்ற திரையில் அவிநாசியில் உள்ள மம் மம் ரெஸ்டாரண்டு அரங்கத்தில் இரு சிறப்பு காட்சிகளாக திரையிட ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரு டிக்கெட் கட்டணமாக 200 ரூபாய் எனவும் இடைவேளையில் பார்வையாளர்களுக்கு காபி, டீயுடன் சில்லி சிக்கன் தரப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். சூர்யா ரசிகர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டணத்தை தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தமிழக அரசின் சினிமாட்டோகிராப் சட்டப்படி லைசன்ஸ் பெற்ற மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களை மட்டுமே பொது வெளியில் திரையிட வேண்டும், ஆனால் தனது ரசிகர்கள் மூலம் உரிமம் இல்லாத ரெஸ்டாரண்டுகளில் ஜெய்பீம் படத்தை திரையிடும் இந்த சட்டவிரோத திரையரங்க செயல்பாட்டை தடுத்து நிறுத்த க்கோரி முதல் அமைச்சருக்கும் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே தளர்வுகளுடனான கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதாலும், ரெஸ்டாரண்டுகளில் ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், ஜெய்பீம் திரைப்பட சிறப்புக் காட்சி வெளியிட திட்டமிடிருந்த நேரம் மற்றும் இடம் அனுமதி இல்லாதது என்பதாலும் அங்கு ஜெய்பீம் படத்தை திரையிட போலீசார் தடைவிதித்தனர். ரசிகர்களின் சிறப்பு காட்சிகளை தடுத்து நிறுத்தியதோடு, இரவு 11 மணிக்கு மேல் ரெஸ்டாரண்டு இயக்கவும் அனுமதியில்லை என்பதை சுட்டிக்காட்டி மூடவும் அறிவுறுத்தினர்.

ரசிகர்களால் பிரச்சினை எழாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.போலீசாரின் நடவடிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஈரோட்டில் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிகளில் உள்ள ரெஸ்டாரண்டுகளில் திட்டமிட்டபடி ஜெய்பீம் சிறப்புக் காட்சி ரகசியமாக நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments