வேரோடு சாய்ந்து விழுந்த மரம்... தலைநசுங்கி பலியான பெண் காவலர்..!

0 5258

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பழமையான மரம் ஒன்று இருந்தது. அங்கு பணிக்கு வரும் சிலர் இந்த மரத்தடியில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கமாகும். செவ்வாய்க்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் பணிக்காக வந்த, முத்தியால்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் கவிதா தனது இருசக்கர வாகனத்தை மரத்தடியில் நிறுத்திய போது, எதிர்பாராத விதமாக பழமையான அந்த மரம் மழை காரணமாக நிலைத்தன்மையை இழந்து, வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், மரத்துக்கு அடியில் சிக்கிய கவிதா, தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அருகில் நின்றிருந்த ராயபுரம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் முருகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், மரத்தடியில் நின்றிருந்த சில பைக்குகளும் சேதமடைந்தன.

சம்பவம் நிகழ்ந்த போது, அந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் மரம் விழுந்த திசைக்கு எதிர் திசையில் நின்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் சாய்ந்த மற்றும் நிலைத்தன்மையற்று இருக்கும் 10 மரங்களை அகற்றுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். மேலும், அடர்த்தியாக அதிக பாரத்தோடு இருக்கும் மரத்தின் கிளைகளை அகற்றவும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலில் 10 லட்சம் ரூபாய் அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக 15லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த காவலர் கவிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் முருகனை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் அவருக்கு, 5லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments